முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்த ஆளுநர் ரவி..

 

By 
stalinravi

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து ஆளுநரின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றமும் விமர்சித்திருந்து. இதனையடுத்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், சட்டமன்றத்துக்கு திரும்ப அனுப்பபட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பினால் அதை எவ்வாறு குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியும் ? அனுப்ப முடியாதே ? முதன் முறை மசோதா ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டபோதே குடியரசு தலைவருக்கு அனுப்பிருக்கலாம்.

மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்து விட்டு அதனை மீண்டும் சட்டமன்றத்துக்கு அனுப்பி விட்டு, அது மறு நிறைவேற்றம்  செய்த பின்னர் அந்த மசோதாவை எவ்வாறு குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியும் ? இந்த விவகாரத்தில் ஆளுநர் தரப்பில் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரும் முதல்வரும் சந்தித்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். 

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு முதல்வர் தரப்பில் தற்போது வெள்ள பாதிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய குழுவும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எனவே வேறொரு நாட்களில் சந்திக்கலாம் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story