தமிழகத்தில் தொடரும் வெப்ப அலையும், கனமழை வாய்ப்பும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..

By 
veyilrain

மே 6-ஆம் தேதி வரை வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்” என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம்,

'தமிழகத்தில், மே 6-ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகரிக்கும். தருமபுரி, திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும். கரூரில் இயல்பை விட ஏழு சதவீதம் அதிகமாக 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

எல்-நினோ காலகட்டத்தில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு இருந்ததால் வெப்பம் அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 - 40 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும். கத்திரி வெயில் காலத்தில் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது.

மழை வாய்ப்பு: அடுத்த 5 நாட்கள் தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

பொதுவாகவே மே மாதம் என்பது வெயில் காலம் என்பதால் கோடை மழை வரும்போது வெயிலின் தாக்கம் சற்று குறையலாம். ஏப்ரல் தொடங்கி 27 நாட்கள் ஈரோட்டில் தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். 

 

Share this story