தென் மாவட்ட கனமழை: மீட்பு பணிகளில் இந்திய ராணுவம்: தமிழக அரசு தகவல்..

By 
armyy

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி  மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 17ஆம் தேதி (நேற்று) காலை முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.  குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில், பல பகுதிகளில் அதி கனமழை பதிவாகியுள்ளது.

காலை 8.30 மணி முதல் இன்று காலை (டிசம்பர்18ஆம் தேதி) 8.30 மணி முதல் மணி வரை திருநெல்வேலியில் 39.12 செ.மீ, தூத்துக்குடி 37.96 செ.மீ, தென்காசி 20.68 செ.மீ, கன்னியாகுமரியில் 11.87 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 94.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மூலக்கரைப்பட்டியில் 61.5 செ.மீ, கன்னியாகுமரி மைலாடியில் 30.32 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பேரிடர் மீட்புப் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு, தேசிய பேரிடர் மீட்பு குழு என மொத்தம் 17 குழுக்களில் 425 வீரர்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி  மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளுக்காக வர உள்ளதாகவும், இந்திய இராணுவம் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் (Common Alert Protocol) மூலம் 62.72 இலட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாததிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி  மாவட்டங்களில் மொத்தம் 84 நிவாரண முகாம்களில் 1545 குடும்பங்களை சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் என 7434 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வரப்பெற்ற 13 புகார்கள் உரிய மேல் நடவடிக்கைக்காக தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் முக்கிய தடங்களிலும் அவசர கால உதவிக்காகவும் சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவுப்படி இயக்கப்படுவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சர்களும், கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு விரைந்துள்ளார். கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story