சென்னையைப் போல் நெல்லையில் மிக கனமழை: தனியார் நிறுவனங்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு..

By 
nellai8

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வங்கக்கடல் மற்றும் அதனையொட்டி பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்தமிழகத்தில் அநேக இடங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர்.

திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தமட்டில் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் பாளையங்கோட்டை, என்ஜிஓ காலனி, பழைய பேட்டை உள்பட பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

மேலும் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேற்கு தொடர்ச்சி மழையில் நல்ல மழை பெய்து வருவதால் ஆற்றில் தண்ணீரில் அளவு என்பது மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. 30 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணியில் திறந்து விட வாய்ப்புள்ளது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த வரும் 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நாளையும் திருநெல்வேயில் பல இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் தான் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி நாளை (திங்கட்கிழமை) திருநெல்வேலி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். அதோடு தனியார் நிறுவனங்களுக்கும் அவர் முக்கிய அட்வைஸை வழங்கி உள்ளார். அதாவது தனியார் நிறுவனங்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை மட்டும் கொண்டு இயங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கனமழையின் காரணமாக இந்த அறிவுரையை வழங்கி உள்ளார்.
 

Share this story