இதோ புதிய டிரெண்ட் : கடலுக்கு அடியில் அரங்கேறும் திருமணங்கள்..

wedding

தற்போது புதுமண ஜோடிகள் கடலுக்கு அடியில் தண்ணீரில் திருமணம் செய்வது புதிய டிரெண்டாகி வருகிறது. ஸ்கூபா டைவிங், பாராசூட் திருமணம் என வாழ்வில் மறக்க முடியாதபடி பிரம்மாண்டமாக தங்களது திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த வகை திருமணங்கள் பலருக்கு ஆச்சரியமாகவும், பிரமிக்க வைப்பவையாகவும் உள்ளது. இதற்கு முன்பு கடலுக்கு அடியில் திருமணம் செய்வது கோவாவில் அதிகளவில் நடந்து வந்தது. தற்போது இதுபோன்ற திருமணங்கள் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரையில் அதிகரித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் விமான நிலையத்தில் இருந்து குறைந்த நேர பயணம், இடையூறு இல்லாத வாகன போக்குவரத்து, முக்கியமாக பாதுகாப்பு உள்ளிட்டவை காரணங்களாக உள்ளன. கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து அதிக அளவு புதுமண ஜோடிகள் வருவதாக இதற்கான ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று இதற்காக சிறப்பு பயிற்சி கொடுத்து வருகிறது. ஒரு மணிநேரத்திற்கு ரூ.25ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கடலுக்கு அடியில் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 200 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதற்கான முன்பதிவு செய்யும் புதுமண ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. காதலர்கள் மற்றும் புதுவித அனுபவத்தை பெற விரும்புபவர்களும் இதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையில் தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளிய மாமல்லபுரம் தற்போது சாகச திருமணத்தில் கோவாவை பின்னுக்கு தள்ளி வருகிறது. ஏப்ரல் மாதம் ஆசியாவின் மிகப்பெரிய திருமண உச்சி மாநாடு சென்னையில் நடத்தப்பட இருப்பதாகவும் அதில் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச திருமண சேவை அமைப்பினர் கலந்துகொள்ள இருப்பதாகவும், திருமண ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது இதுபோன்ற வாழ்வில் மறக்க முடியாத திருமணம், போட்டோ சூட், கேன்டிட் ஷாட், அட்வென்ஜர், விருந்தோம்பல், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட புதிய திட்டங்களை பிரபலமாக்க மாமல்லபுரம், கோவளம் பகுதியில் உள்ள தனியார் மரைன் நிறுவனம், நட்சத்திர ஓட்டல்கள் இந்த ஆண்டு கூடுதலாக திருமண நிகழ்ச்சிகள் நடத்த இலக்கு வைத்து முயற்சி எடுத்து வருவதாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். Couple 
 

Share this story