4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

By 
hrain1

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.6 - புதன்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் (டிச.4) இன்றும் (டிச.5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நாளை (டிச.6), புதன்கிழமையன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தென்மேற்கு வங்கக்கடல்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் புயல் ஞாயிறு மாலை வட தமிழக கரையை சுமார் 250 கி.மீ. தொலைவில் நெருங்கிய போது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. புயல் மேலும் நெருங்கிய நிலையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. காலையில் காற்றின் வேகம் அதிகரித்ததுடன், மழையின் தீவிரமும் அதிகரித்து அதிகனமழையாக கொட்டியது. மீனம்பாக்கத்தில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.

 

 

Share this story