சென்னையை உலுக்கிய ஆணவக் கொலை.. இதற்காக தான் கொலை செய்தோம்.. கைதான 4 பேர் பகீர் தகவல்..

By 
kak1

சென்னை பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் சகோதரர் தினேஷ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பிரவீன்(26). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் ஜல்லடையாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த மாதங்களுக்கு முன்னதாக ஷர்மியை பிரவீன் திருமணம் செய்து கொண்டு பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

தனது மகள் ஷர்மியை ஏமாற்றி திருமணம் செய்த பிரவீன் மீது பெண் வீட்டார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு பிரவீன் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஜாலி பே பார் என்ற மதுபான விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது பிரவீனை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் உடனே பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இக்கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பிரவீன் வேறோரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் தினேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரவீனை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவ இடத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Share this story