நான் 2047-க்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்: பிரதமர் மோடி

By 
road2

தான் ஏற்கெனவே 2047-ஆம் ஆண்டுக்கு திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகவும், இந்தியா அதிவேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தனியார் ஊடகம் ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடியிடம், “2029 மக்களவை தேர்தலுக்கும் இப்போதே தயாராகி விட்டீர்களா?” என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர், “நீங்கள் 2029-ஆம் ஆண்டிலேயே சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நான் ஏற்கெனவே 2047-ஆம் ஆண்டுக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இன்று மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவைக் கொண்டாடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. ஒட்டுமொத்த உலகமும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியா தொடர்ந்து அதிவேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி.

இன்று தேசத்தின் மனநிலை, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளை எதிர்நோக்கியிருக்கிறது. தேசத்தின் மனநிலை இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதுதான். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு நான் வரும்போதெல்லாம், நான் பல தலைப்புச் செய்திகளைத் தருவேன் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்கும். ஆனால் நான் ‘ஹெட்லைன்’களுக்காக வேலை செய்யவில்லை, எடுத்துக் கொண்ட பணிகளை முடிப்பதற்கான ‘டெட்லைன்’களுக்காக வேலை செய்கிறேன்.

2014-க்கு முன்பு, வடகிழக்கு பகுதி எப்போதும் முன்னுரிமை பட்டியலில் கீழே இருந்தது. ஆனால் 2014-க்குப் பிறகு, எங்கள் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அனைவரும் மாவட்ட அலுவலகங்கள் மட்டுமின்றி, பிராந்தியத்தின் உள்பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம்.

நமது மத்திய அமைச்சர்கள் வடகிழக்கு பகுதிக்கு 680 முறை சென்றுள்ளனர். முந்தைய பிரதமர்கள் மேற்கொண்ட கூட்டுப் பயணங்களை விட, வடகிழக்கு பகுதிகளுக்கு நான் மட்டும் அதிக முறை சென்றுள்ளேன். நாங்கள் வடகிழக்கு குறித்த மனநிலையை மாற்றியிருக்கிறோம். இந்தியாவின் கடைசி கிராமங்கள் என்று அழைக்கப்பட்ட பகுதிகளை நாங்கள் மாற்றி, முதல் கிராமங்கள் என்று அழைக்க ஆரம்பித்துள்ளோம்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Share this story