எனக்கு உடன்பாடில்லை: ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு தமிழிசை எதிர்ப்பு..

By 
tamilisai

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை பொதுமக்கள் நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

அதன்படி பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். வாழ்த்துக் கூறிய பொதுமக்களுக்கு ஆளுநர் தமிழிசை இனிப்புகளையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, மத்திய அரசு, மாநில அரசு இணைந்து புதுச்சேரி மக்கள் 2024-ல் மகிழ்ச்சியாக வாழ அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றும். மாநில அரசுகளுக்கு எந்தெந்த வகையில் உதவிகள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் மத்திய அரசு செய்து வருகிறது. தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் பதிலளித்திருக்கிறார்.

வேலை, படிப்பு சம்பந்தமாகவும் வெளிநாடு செல்பவர்கள் சென்னைக்கு வராமல் திருச்சியிலேயே விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லாவற்றிலும் வளர்ச்சியடைந்த நாடாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மத்திய அரசு ஒருபோதும் புறக்கணிக்காது. தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப் பட்டுள்ளது. 

எல்லா விதத்திலும் வளர்ச்சியடைந்த நாடாக நாம் மாறி வருகிறோம் என்பதை ஒப்புக் கொள்ளதான் வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அந்த கஷ்டத்திலும் அவர்களை வரிசையாக நிற்க வைக்க வேண்டுமா என கேள்வி எழுப்பிய அவர், நிவாரணங்களை அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி இருக்கலாம். தெலுங்கானா, கர்நாடகாவில் வங்கி கணக்கில் செலுத்துவது போன்று தமிழகத்திலும் வங்கி கணக்கில் செலுத்தி இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

ஹாப்பி ஸ்ட்ரீட் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அது வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. அதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். கொண்டாட்டம் எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். அதை காவல்துறைக்கும், அரசுக்கும் தெரிவிப்பேன். கொண்டாட்டங்கள் திண்டாட்டங்களாக மாறி வரக்கூடாது. இதில் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

தெலுங்கானாவில் கடந்த ஆட்சியில் இருந்த முதலமைச்சர் மதிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது முதல்வர் தன்னை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூறியிருக்கிறார். தமிழகத்தில் ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், கருத்து வேறுபாடு மோதல்களாக மாறாமல் மக்களுக்கு பலன் தருவதாக இருக்க வேண்டும் என்றும் தமிழிசை கூறினார்.

Share this story