'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க, அரைமனதாக ஒப்புக்கொண்டேன் : அமைச்சர் துரைமுருகன் பேச்சு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், சிம்பு, விக்ரம்பிரபு, ரகுமான், துருவ் விக்ரம், நடிகைகள் ஐஸ்வர்யாராய், திரிஷா, குஷ்பு, சுகாசினி, ஜெயசித்ரா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்ய லட்சுமி, இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் லைகா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அம்ரேஷ், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில், அமைச்சர் துரைமுருகன் பேசியபோது,
" ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவில் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் படிக்கின்ற காலத்தில் 5 முறை படித்திருக்கிறேன். இக்கதையை படமாக்குவதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். நான் கதையை படித்தீர்களா என்று கேட்டதற்கு அவர் இல்லை என்றார்.
அப்போது, இப்படத்தை நீங்கள் எடுக்க வேண்டாம் என்றேன். அவர் எடுத்தே தீருவேன் என்றார். கதைகளை படமாக்குவது எளிது, காவியங்களை படமாக்குவது கடினம் என்று கூறினேன். யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். அரைமனதாக ஒப்புக்கொண்டேன். இயக்குனர் யார் என்று கேட்டேன். மணிரத்னம் என்றார்.
அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் இக்கதைக்கு ஒத்துவரமாட்டார், வேண்டாம் என்றேன். ஆனால், படத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். வீட்டில் இருந்தே சல்யூட் வைத்தேன்.
வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். எனது தொகுதிக்குட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர். அதனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி. கமல்ஹாசனுக்கு கருணாநிதி கலைஞானி என பெயரிட்டார். அவருக்கு இணையானவர் திரையுலகில் இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இல்லை. எனது பேச்சைக் கேட்காமல் இப்படத்தை எடுத்து வெற்றி கண்ட சுபாஷ்கரனுக்கு வாழ்த்துகள்.
ஒரு படத்தின் மூலம் ஒரு தமிழ் மன்னனை அறிமுகப்படுத்திய பெருமை சுபாஷ்கரனை சேரும். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இரண்டு மடங்கு ஓடும். வாழ்த்துக்கள்" என்றார்.