சென்னையில், திருமணமான 22 நாளில் 80 பவுன் நகையுடன் புதுப்பெண் ஓட்டம்..

By 
mt6

மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (27). சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகேயுள்ள சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகள் ஆர்த்தி (22). சேலையூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம் படித்து வருகிறார்.

இந்நிலையில், விக்னேஷ் மற்றும் ஆர்த்தி ஆகியோருக்கு கடந்த மாதம் 11ம்தேதி பல்லாவரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது. ஆர்த்திக்கு 80 பவுன் நகை போட்டனர். விக்னேஷ், ஆர்த்தி தம்பதியினர் விக்னேஷின் குடும்பத்தினருடன் மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெருவில் வசித்து வந்தனர். இந்நிலையில், கல்லூரிக்கு சென்று வருவதாக விக்னேஷிடம் கூறிவிட்டு கடந்த 3ம்தேதி வீட்டில் இருந்து ஆர்த்தி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் ஆர்த்தி வராததால் சந்தேகமடைந்த விக்னேஷ், கல்லூரிக்கு சென்று விசாரித்துள்ளார்.

அங்கும் அவர் இல்லாததால் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. வீடு திரும்பிய விக்னேஷ் பீரோவில் வைத்திருந்த 80 பவுன் நகை மாயமானது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். தாம்பரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், திருமணத்திற்கு முன்பே ஆர்த்தி ஒரகடம் அருகேயுள்ள சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபரை காதலித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சேந்தமங்கலம் பகுதிக்கு சென்றபோது, ஆகாஷ் வீடு பூட்டப்பட்டு இருந்தது. ஆகாஷின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். திருமணமான 22 நாட்களில் புதுபெண் நகையுடன் மாயமான சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this story