சென்னையில், பெண்களின் புகைப்படங்களோடு வரும் வெளிநாட்டு போன் அழைப்புகள்..

pnn

ஆன்லைனில் பெண்களின் புகைப்படங்களை காட்டி வலைவிரித்து பின்னர் பணம் பறிக்கும் கும்பலின் மோசடி லீலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அந்த வகையில் வியட்னாம், மொராக்கோ, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் அடிக்கடி அழைப்புகள் வருகின்றன. இதனால் சென்னையில் வசிக்கும் வாலிபர்கள் முதல் வயதான நபர்கள் வரை பெரும்பாலானவர்கள் தவித்துப்போய் உள்ளனர்.

இது போன்ற அழைப்புகளை எடுத்து பேசினால் சில நேரங்களில் செல்போன்கள் செயல் இழந்து விடுகின்றன. எதிர்முனையில் பேசுபவர்கள் சில நேரங்களில் மவுனமாக உள்ளனர். சிலர் பெண் குரலில் பேசுவதையும் கேட்க முடிகிறது. இந்த அழைப்புகள் எதற்காக வருகின்றன? என்பதை யூகிக்க முடியவில்லை என போன் அழைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்த அழைப்புகள் சில நேரங்களில் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று போலீசார் எச்சரிக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் இது போன்ற அழைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம். அப்படி எடுத்தால் அது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தி விடும்.

குறிப்பாக வெளிநாட்டு அழைப்புகள் வரும்போது திடீரென ஆடையின்றி பெண்கள் தோன்றி விடுவார்கள். அதனை நீங்கள் ஒரு கணம் பார்த்து விட்டாலே உங்கள் போட்டோ அவர்களின் செல்போனில் பதிவாகிவிடும். இதை வைத்து எதிர்முனையில் போன் செய்தவர்கள் உங்களிடம் பணத்தை பறிக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கும் போலீசார் இது போன்ற போன் அழைப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி போலீசில் புகார் அளிக்கவேண்டும் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.


 

Share this story