பணத்தகராறில், டைரக்டர் கடத்தல் : 7 பேர் கைது
 

By 
kidnapp

பம்மல் பகுதியை சேர்ந்தவர் முகமது ஐசக். குறும்பட இயக்குனர். இவரது நண்பரான மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த முன்வீர் உசேன் என்பவருடன் சேர்ந்து குறும்படம் எடுக்க திட்டமிட்டு இருந்தார்.

இதற்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த பைனான்சியர் செல்வம் என்பவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.80 லட்சம் கடன் வாங்கினர். அதில் இதுவரை ரூ.30 லட்சம் மட்டுமே திருப்பி கொடுத்ததாக தெரிகிறது. மீதி உள்ள ரூ.50 லட்சம் பணத்தை கேட்டு செல்வம் நெருக்கடி கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் பணத்தை திருப்பி செலுத்த கால அவகாசம் கேட்பதற்காக முகமது ஐசக், முன்வீர் உசேன் இருவரும் பஸ் மூலம் காஞ்சிபுரம் சென்றனர்.

அப்போது செல்வம்;  ஐசக், உசேன் ஆகிய இருவரையும் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளார். மேலும் உடனடியாக ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்து விட்டு இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறி மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐசக்கும், உசேனும் இது பற்றி வளசரவாக்கத்தில் உள்ள நண்பர் ஒருவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தனது நண்பர்கள் கடத்தப்பட்டது குறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த கடத்தல் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் காஞ்சிபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே ஐசக்கின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு செல்வம் மாற்றிக் கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் செல்போன் சிக்னல் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காஞ்சிபுரம் போலீசார் பைனான்சியர் செல்வம் அவரது நண்பர்கள் உட்பட 7 பேர் கும்பலை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் கடத்தி வைக்கப்பட்ட குறும்பட இயக்குனர் ஐசக் அவரது நண்பர் உசேன் ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டனர். கைதானவர்களிடம் இருந்து 2 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர்களை வளசரவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் உதவி கமிஷனர் கவுதமன், இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா விசாரணை நடத்தி வருகிறார்கள். பைனான்சியர் செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

Share this story