தமிழகத்தில், எந்தெந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை?

By 
In Tamil Nadu, 'Red Alert' alert for which districts

தமிழகத்தில், எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 'தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. 

இது மேற்கு வட மேற்கு திசையில், நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்கக் கூடும். 

கனமழை :

இதன் காரணமாக,
இன்று (18-11-2011) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், 

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும்.

திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை,குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 

வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.

நாளை (19-11-2011) திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். 

20, 21, 22-ந்தேதி :

நாளை மறுநாள் (20-11-2011) கிருஷ்ணகிரி, தருமபுரி ,திருப்பத்தூர் ,ஈரோடு ,கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர் ,திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வருகிற 21-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

22-ம் தேதி வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

சென்னை :

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும். 

அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story