தமிழகத்தில், வியாபாரிகள்போல பயங்கரவாதிகள் சதித்திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

By 
In Tamil Nadu, terrorists conspire like traders intelligence alert

தசரா பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி ஆகியவை அடுத்தடுத்து வரும் நிலையில், இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேடுதல் வேட்டை :

நாடு முழுவதும் தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை ராணுவத்தினரும், போலீசாரும் கண்காணித்து வருகிறார்கள். பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

டெல்லியில், போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதில் 6 பயங்கரவாதிகள் பிடிபட்டனர். 

அவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த ஜன் முகமது ஷேக், டெல்லியை சேர்ந்த ஒசாமா, உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூல்சந்த், முகமது அபுபக்கர், ஜீஷான் கமர், முகமது ஆமிர் ஜாவித் என்பது தெரிய வந்தது.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்காக பணியாற்றியவர்கள் ஆவர். 

பிடிபட்ட பயங்கரவாதிகள் 6 பேரும் சதி வேலையில் ஈடுபடப்போவதாக அதிர்ச்சியூட்டும் வகையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஜீஷான் கமரும், ஒசாமாவும் பாகிஸ்தான் ராணுவத்தில் ஆயுத பயிற்சி பெற்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் பதவியில் இருக்கும் காஜி என்பவர் தலைமையில் இவர்களுக்கு சிந்து மாகாணத்தில் உள்ள ரகசிய முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சதித்திட்டம் :

கையெறி குண்டுகளை தயாரிப்பது, எந்திர துப்பாக்கிகளை கையாள்வது, சாதாரணமாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி ஒரு இடத்தை தீக்கிரையாக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

பிடிபட்ட பயங்கரவாதிகள் டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரில் 4 பயங்கரவாதிகளை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். மற்ற 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழகத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

தென்மாநிலங்களில் பதுங்கல் :

இதனால், தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, மத்திய உளவுத்துறையும் தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

அதன்பேரிலேயே தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று மத்திய உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

அவர்கள் வியாபாரிகள் பெயரில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஊடுருவி இருப்பதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாகவும் தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

370-வது பிரிவு :

காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தவும், முக்கிய பிரமுகர்களை கொலை செய்யும் நோக்கத்திலும் பயங்கரவாதிகள் வந்திருப்பதாக மத்திய உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரை சேர்ந்த வியாபாரிகள் பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்களின் உதவியுடன் புதிதாக வியாபாரிகள் யாராவது காஷ்மீரில் இருந்து தமிழகம் வந்துள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் காஷ்மீர், டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு வரும் தொலைபேசி அழைப்புகளையும் தொடர்ந்து போலீசார் கண்காணிக்கிறார்கள். 

தமிழகத்தில், பண்டிகை காலங்கள் நெருங்குவதை தொடர்ந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share this story