வேலூரில், 65 ரயில்கள் ரத்து : 70,000 பயணிகள் அவதி
 

By 
In Vellore, 65 trains canceled 70,000 passengers stranded

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள கிரிவலம் பகுதியில், பொன்னையாற்றுக்கு நடுவே, ரயில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த வழியாக கடந்த 3 நாட்களாக செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 23-ந்தேதி முதல், இன்று வரையில் பல ரயில்கள் ரத்தாகி இருக்கிறது.

65 ரயில்கள் :

சென்னையில் இருந்து கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வரும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட பல ரயில்கள் ரத்தாகி இருந்தன.

நேற்று மட்டும் இதே போன்று, 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று மங்களூர்-சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா-சென்னை சென்ட்ரல், ரேணிகுண்டா- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்தாகி உள்ளன.

விரிசல் ஏற்பட்ட பொன்னையாற்று பாலம் வழியாக, செல்லக்கூடிய ரயில்வே வழித்தடத்தில், கடந்த 3 நாட்களாக மொத்தம் 65 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

முன்பதிவு :

ஒரு ரயிலில் 1,200 பயணிகள் வரை முன்பதிவு செய்து பயணிப்பார்கள். அந்த வகையில், இந்த 65 ரயில்களிலும், சுமார் 70 ஆயிரம் பயணிகள் வரை பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி, இவர்களில் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு ரயில்களில் செல்ல முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்தனர். கடைசி நேரத்தில் திடீரென ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், ரயில்களில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

ஓரளவு வசதி படைத்தவர்கள் உடனடியாக விமானங்களிலும் பயணமாகி உள்ளனர். பலர் நேற்று உடனடியாக டிக்கெட் எடுத்து தங்களது பயணங்களை மேற்கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விமான கட்டணமும் அதிகளவு உயர்ந்து இருந்தது. சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு இருந்தது.

மேலும், பலர் கடைசி நேரத்தில் ஆம்னி பஸ்களில் டிக்கெட் எடுத்து சொந்த ஊர்களுக்கு பயணமானார்கள். 

இதனால், சென்னையில் இருந்து கோவை, பெங்களூர், மங்களூர், வேலூர், மேட்டுப்பாளையம், ஈரோடு, ஏலகிரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பஸ்களில் நேற்று அதிகளவில் கூட்டமும் அலைமோதியது.

நேற்று மட்டும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய ரயில்கள் ரத்து ஆனதால், மாற்றுப் பயணத்தை மேற்கொண்டனர்.

இதுபோன்று, பயணிகள் பாதிப்பை கருத்தில் கொண்டு பொன்னையாற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில்வே நிர்வாகம் :

மேம்பாலத்துக்கு அடியில் தேங்கியுள்ள தண்ணீரை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, வேறு இடத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். 

அதன்பிறகு, பாலத்தில் உள்ள விரிசலை சரி செய்யும் பணி நடை பெற்று வருகிறது.

இந்த பணிகளை விரைவில் முடித்து ரயில்வே பாலம் வழியாக வழக்கம்போல ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, ரயில்வே உயர் அதிகாரிகள் தேவையான அறிவுரைகளை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். விரிசல் ஏற்பட்டுள்ள பாலம், மிகவும் பழமையான பாலம் ஆகும்.

1865-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதனால் அதன் உறுதித்தன்மை குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பழுதடைந்த ரயில்வே பாலத்தை சீரமைக்கும் பணிகளில் ரயில்வே பொறியாளர்கள் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போர்க்கால அடிப்படையில் பணியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று 2-வது நாளாக பாலத்தை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த பாலத்தில் 56 தூண்கள் உள்ளன. 

இதில் 38, 39-வது தூண்களுக்கு இடையேதான் விரிசல் ஏற்பட்டு உள்ளது. அந்த பகுதியில் கான்கிரீட் கலவை கொண்டு சீரமைத்துள்ளனர். 38-வது தூணை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பாலத்தில் அனைத்து தூண்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

பாலம் சீரமைக்கப்படும் பணிகளை சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் கணேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

சோதனை ஓட்டம் :

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, 'பாலத்தில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

இன்று மாலைக்குள் மீதமுள்ள பணிகளும் முடிந்துவிடும். அதன்பிறகு, சோதனை ஓட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். 

இதன்மூலம், நாளை முதல் பொன்னையாற்று பாலத்தின் வழியாக ரயில்களை வழக்கம்போல இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

Share this story