பள்ளிக்கு குழந்தைகளின் வருகை அதிகரிப்பு : அமைச்சர் உதயநிதி தகவல்

diffin

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2-வது நாளாக இன்று சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட கள ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கள ஆய்வில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். அப்போது திடீரென அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மணியனூர் மற்றும் நெத்திமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் சமையல் செய்யும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் குழந்தைகளிடம் தங்களுடைய குறைகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் மிக உன்னதமான காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு சிற்றுண்டிகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன். இதில் குழந்தைகள் ஒரு சில குறைகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கியதற்கு காரணமே குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது. தற்போது குழந்தைகள் அதிக அளவில் பள்ளிக்கு வருகின்றனர். காலை சிற்றுண்டி உணவு தரமானதாக உள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

காலை சிற்றுண்டியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு வகை வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் சீக்கிரம் வருகை புரிகின்றனர். நன்கு படிக்கின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் பாரபட்சம் இன்றி உணவு வழங்க வேண்டும், உணவு வழங்குவது தொடர்பான கையேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும், கழிவறைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகளை ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story