சாதி மறுப்பு திருமணம்.. மனைவி மீதான காதல்.. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மறைக்கப்பட்ட கதை..

By 
nitis2

ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவரான நிதிஷ்குமார் பீகாரின் தற்போதைய முதல்வராக உள்ளார். நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் மத்திய அரசை நிர்ணயிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாகவும் அவர் மாறியுள்ளார். பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 4-5 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்று தேர்தலுக்கு முன்பு பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் கணித்தனர். இருப்பினும், அக்கட்சி 12 இடங்களை பிடித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைப்பதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நிதிஷ்குமார் கிங்மேக்கராக மாறியுள்ளார். அவரது அரசியல் வாழ்க்கைக்கு மத்தியில், முற்றிலும் மாறுபட்ட பக்கத்தை முன்வைக்கும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பார்ப்போம்.

நிதிஷ்குமார் மனைவி

நிதிஷ்குமாருக்கு மிகப்பெரிய பலமாக இருந்தவர் அவரது மனைவி மஞ்சு குமாரி சின்ஹா. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் ஒரு 'விசுவாசமான நபர்' என்பதை அவர்களது ஆழமான காதல் கதை நிரூபிக்கிறது. 1973ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி மஞ்சு குமாரி சின்ஹாவை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திருமணம் முடித்தார். நிதுஷ்குமார் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர். ஆனால், அவரது மணைவி கயஸ்தா சமூகத்தை சேர்ந்தவர். அவர்களது திருமணம் சாதி மறுப்பு திருமணமாகும். அவரது மனைவி ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

சிறுவயதிலிருந்தே, வரதட்சணை, குழந்தை திருமணம் போன்றவற்றிற்கு எதிராக குரல் எழுப்பி வந்தவர் நிதிஷ்குமார். உதாரணமாக, அவரது திருமணத்தின் போது, அவரது பெற்றோர் ரூ.22,000 வரதட்சனை பெற்றதை அறிந்த அவர் மிகவும் கோபமடைந்தார். உடனடியாக அந்த பணத்தை தனது மனைவு வீட்டாரிடம் அவர் ஒப்படைத்து விட்டார். மேலும் வரதட்சணையை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்று தனது பெற்றோரிடம் கண்டிப்பாக கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து, எந்தவித ஆடம்பரமான ஏற்பாடுகளும் இல்லாமல் மஞ்சு குமாரி சின்ஹாவை நிதீஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். திருமண நாள், இடம் ஆகியவை மாறியதால், மீண்டும் திருமண பத்திரிகை அச்சிட்டு வழங்கப்பட்டன.

கடந்த 2007ஆம் ஆண்டு தனது மனைவி மஞ்சு குமாரி சின்ஹா ​​இறந்தபோது நிதிஷ் குமார் பெரும் மனவேதனை அடைந்தார். 34 வருட மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குப் பிறகு, மஞ்சுவின் மறைவு நிதிஷ் மற்றும் அவர்களது மகன் நிஷாந்த் குமாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மஞ்சு குமாரி நிமோனியாவால் காலமானார்.

நிதிஷ்குமார் அரசியல் வாழ்க்கை

பீகாரின் பக்தியார்பூரில் கவிராஜ் ராம் லக்கன் சிங் மற்றும் பரமேஸ்வரி தேவி தம்பதிக்கு 1951ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி நிதிஷ்குமார் பிறந்தார். அவரது தந்தை ஆயுர்வேத பயிற்சியாளர். நேபாளத்தைச் சேர்ந்த அவரது தாயார் பற்றி பெரிதாக தகவகல்கள் எதுவும் இல்லை. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, நிதீஷ் குமார் 1972 இல் பீகார் பொறியியல் கல்லூரியில் (இப்போது NIT பாட்னா) இளங்கலை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். பட்டப்படிப்பை முடித்த நிதிஷ் குமாருக்கு பீகார் மாநில மின்சார வாரியத்தில் வேலை கிடைத்தது.

ஆனாலும், அவரது எதிர்கால சிந்தனை அரசியல் பற்றியே இருந்தது. 1974 முதல் 1977 வரை ஜெயபிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் நிதிஷ் குமார் பங்கேற்றார். அரசியல் அனுபவங்களை பெற்ற நிதிஷ் குமார் ஜனதா கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து, சத்யேந்திர நரேன் சின்ஹா ​​போன்ற புகழ்பெற்ற அரசியல் தலைவர்களிடம் இருந்து அரசியலை கற்கத் தொடங்கினார். நிதிஷ்குமார் தனது 26 வயதில் 1997 மக்களவைத் தேர்தலில் ஹர்நாட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1980ல், மீண்டும் முயற்சி செய்து தேர்தலில் தோல்வியை ருசித்தார். ஜனதா கட்சியில் இரண்டு தோல்விகளை சந்தித்த நிதிஷ்குமார், அரசியலில் இருந்து விலக முடிவு செய்தார். இருப்பினும், விடா முயற்சியுடன் அரசியல் களத்தில் இருந்த அவர், 1985இல் ஹர்நாட் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பிறகு, ஒன்பது முறை பீகார் முதல்வராக பதவி வகித்துள்ளார். அது மட்டுமின்றி, 17 ஆண்டுகள் 288 நாட்களுடன் பீகாரில் அதிக காலம் முதல்வராக பதவி வகித்தவர் என்ற பெருமையையும் நிதிஷ்குமார் பெற்றுள்ளார்.

நிதீஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதல்வராக மட்டுமல்லாமல், தனது புகழ்பெற்ற அரசியல் வாழ்க்கையில் பல பதவிகளையும் வகித்துள்ளார். மத்திய விவசாயம், ரயில்வே என தாம் பணியாற்றிய ஒவ்வொரு துறையிலும் தனது முத்திரையை பதித்துள்ளார். பீகாரில் மட்டுமல்ல நாட்டின் பலம்வாய்ந்த மூத்த அரசியல்வாதிகளில் நிதிஷ்குமாரும் ஒருவர். பக்தியார்பூரைச் சேர்ந்த 'முன்னா' என்ற புனைப்பெயர் கொண்ட சாதாரண இளைஞன் (நிதிஷ்குமார்) இந்திய அரசியலில் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவராக மாறிய கதை அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

Share this story