புது வைரஸ் எக்ஸ்.பி.பி.1.16 ஆபத்தானதா? : நிபுணர்கள் விளக்கம்

xpp

இந்திய மருத்துவ நிபுணர்கள் நாடு முழுவதும் இன்புளுயன்சா வைரஸ்கள் பரவி இருப்பதை கண்டறிந்தனர். எச்.1 என்.1 மற்றும் அடினோ என்ற பெயர்களிலும் வைரஸ்கள் பரவி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. 

இதில், வட மாநிலங்களில் எச்.3 என்.2 வைரசும், தமிழகத்தில் எச்.1 என்.1 வைரசும் அதிகளவில் பரவி இருப்பது தெரிய வந்தது. 

ஏற்கனவே உள்ள ஒமைக்ரான் வைரஸ் பிரிவுகளின் தாக்கத்தோடு இன்புளுயன்சா வைரஸ்களின் தாக்கமும் சேர்ந்தால்தான் பெரும் பாலானவர்களுக்கு காய்ச்சல், இருமல் தொல்லை ஏற்பட்டது. இதற்கிடையே நிறைய பேருக்கு என்ன வகை வைரஸ் தாக்கி இருக்கிறது என்று தெரியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையடுத்து, கடந்த சில தினங்களாக ஒமைக்ரான் மரபணு மாற்றத்துக்குள்ளான வைரஸ்களின் மரபணுக்கள் மீண்டும் ஆய்வு செய்யப் பட்டன. 

அந்த பகுப்பாய்வில் எக்ஸ்.பி.பி. என்ற வகை வைரஸ் தொற்றுதான் சமீப காலமாக நிறைய பேரை பாதித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில், எக்ஸ்.பி.பி. வைரசின் மரபணுவிலும் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. அவை எக்ஸ்.பி.பி.1 மற்றும் எக்ஸ்.பி.பி. 1.16 என்றும் உருமாற்றம் பெற்றுவிட்டன. 

கடைசியாக கண்டறியப் பட்ட எக்ஸ்.பி.பி.1.16 ரகத்துக்கு சமீபத்தில்தான் பெயர் சூட்டப்பட்டது. இது சற்று வேகமாக பரவக்கூடியது. 

இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணமாக தும்மல் போட்டாலே அது மிக எளிதாக மற்றவர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக பரவுவதாக மத்திய அரசின் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் இந்த வைரஸ்கள் அதிகளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனால்தான் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை அறிவுறுத்தி உள்ளது. முகக்கவசம் அணிவதை முக்கிய தடுப்பாக சொல்கிறார்கள். 

நிறைய பேர் கூட்டமாக இருக்கும் பகுதிக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். 

காய்ச்சல், இருமல் இருந்தால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 

ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால்தான் புதிய வைரசை விரட்ட முடியும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
*

Share this story