இதுவும் வேலைதான்: மரியாதை கோரும் பாலியல் தொழிலாளர்கள் உரிமைக் குழு..

By 
sw1

மரியாதையான நடத்தை, வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என பாலியல் தொழிலாளர்கள் உரிமைக் குழு வலியுறுத்தியுள்ளது

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த தரவுகளை கோரும்போது, .நா. சிறப்பு அறிக்கையாளர் பயன்படுத்திய மரியாதைக்குறைவான சொற்களுக்கு எதிராக பெண்கள் உரிமை அமைப்புகள், பாலியல் தொழிலாளர்களுக்கான உரிமைக்குழுக்கள் என சுமார் 3,600 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஐ.நா.சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையானது வருகிற ஜூன் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 56ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கையானது, பாலியல் தொழிலுக்கான உலகளாவிய நிகழ்வுக்கும், பெண்கள் / சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வதை நோக்கமாக கொண்டது. எனவே, பாலியல் தொழிலுக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கும் இடையிலான உறவை புரிந்துகொள்வதற்கும், அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் பெண்களை காப்பாற்றும் பொருட்டும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், பெண்களை திறம்படப் பாதுகாப்பதற்கும் மாநிலங்கள் எடுக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்ட தனது அறிக்கைக்கு தேவையான விஷயங்களை ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் கோரியிருந்தார்.

ஆனால், பாலியல் தொழிலாளிகள் குறித்து அவர் பயன்படுத்திய சில சொற்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘பாலியல் தொழிலாளி’ என்ற வார்த்தைக்கு பதிலாக அந்த வார்த்தையை புறக்கணித்து ‘விபச்சாரம் செய்யும் பெண்கள்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலியல் தொழிலாளர்களுக்கான உரிமைக்குழுக்கள் உள்பட சுமார் 3,600 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக, பாலியல் தொழிலாளர்களின் புகார் மனுவை  சமர்பித்த வழக்கறிஞர்கள் விருந்தா குரோவர் மற்றும் ஆர்த்தி பாய் ஆகியோர கூறுகையில், ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் பயன்படுத்திய வார்த்தைகள் இத்தனை ஆண்டுகளாக போராடி வரும் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

1,50,000 க்கும் மேற்பட்ட பெண், மாற்றுத்திறனாளி மற்றும் ஆண் பாலினத் தொழிலாளர்களைக் கொண்ட பான்-இந்தியா அமைப்பான பாலியல் தொழிலாளர்களின் தேசிய அமைப்பும் National Network of Sex Workers (NNSW), ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

“பெண்கள் மற்றும் சிறுமிகள் என்ற தெளிவான வரையறை இருக்க வேண்டும். அவர்கள் வயது வந்த பெண்களுடன் இணைக்கப்படக் கூடாது. விபச்சாரம் செய்யும் பெண்கள் என்ற வார்த்தை இந்தியாவில் பயன்படுத்தப்படுவதில்லை.” என பாலியல் தொழிலாளர்களின் தேசிய அமைப்பு தனது புகார் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

‘விபச்சாரி' மற்றும் 'விபச்சாரி பெண்கள்' என்ற சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்த 'பாலியல் தொழிலாளர்கள்' என்ற வகையுடன் சிறுமிகளை இணைப்பதை தவிர்க்க வேண்டும். கடத்தலை தடுப்பதுடன், தானாக முன்வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் பிரித்து பார்க்க வேண்டும்.” என அவர்கள் கோரியுள்ளனர்.

Share this story