தமிழ்நாட்டுடனான தனது வலுவான பிணைப்பு.! - கன்னியாகுமரியில் துவங்கிய ஏக்தா யாத்ரா பற்றி பேசிய பிரதமர் மோடி..

By 
kanyaa

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அளித்த ஒரு பேட்டியில், தமிழ்நாட்டுடன் தனக்கு நீண்ட காலமாக உள்ள ஒரு இணைபிரியாத நல்ல பிணைப்பு பற்றி பேசியுள்ளார்.  

கடந்த 1991 "ஏக்தா யாத்ரா", பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் நடத்தப்பட்டது. தேசிய ஒற்றுமையை ஆதரித்தும், பிரிவினைவாத இயக்கங்களை எதிர்த்தும், பாஜக இந்திய அளவில் இந்த யாத்திரையை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியின் மிகசிறந்த கவிஞரான சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளான டிசம்பர் 11ம் தேதி, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இந்த யாத்திரை துவங்கியது. 

1991ம் ஆண்டு கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த யாத்திரையை ஒழுங்கமைக்க உதவியது தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆனந்திபென் படேல் ஆகியோர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யாத்திரை குறித்து தான் நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார். 

ஏக்தா யாத்திரையின் தொடக்கத்தில், பாஜக டாக்டர் முரளி மனோகர் ஜோஷி மற்றும் இந்த யாத்திரையின் அமைப்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் இந்திய தேசியக் கொடியை முறையே சுதந்திரப் போராட்ட வீரர்களான ஷஹீத் பகத் சிங் மற்றும் ராஜ்குருவின் சகோதரர்களான ராஜிந்தர் சிங் மற்றும் தேவகிநந்தன் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பரம்வீர் சக்ரா விருது பெற்ற கான்ஸ்டபிள் அப்துல் ஹமீதின் மகன்கள் ஜுபைத் அகமது மற்றும் அலி ஹாசன் ஆகியோரும், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.  

Share this story