ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமறைவு..முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..

By 
hemant

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜார்கண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். அம்மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய 7 சம்மன்களையும் ஹேமந்த் சோரன் புறக்கணித்து விட்டார்.

இதனிடையே, கடந்த 27ஆம் தேதியன்று ஹேமந்த் சோரன் டெல்லி புறப்பட்டு சென்றார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் டெல்லி புறப்பட்டு சென்றதாகவும், விரைவில் அவர் ராஞ்சி திரும்புவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டன. ஆனால், இதுவரை அவர் ராஞ்சி திரும்பவில்லை. அவருடன் சென்ற ஒரு பாதுகாப்பு அதிகாரி ராஞ்சி திரும்பிய நிலையில், மற்றொருவரை  காணவில்லை என தெரிகிறது.

அதேசமயம், ஹேமந்த் சோரனை விசாரிக்க டெல்லியில் உள்ள ஜார்கண்ட் பவன் மற்றும் மோதிலால் நேரு மார்க்கிலுள்ள அவரின் தந்தை இல்லத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லாததால், டெல்லியில் ஜார்கண்ட்முதல்வர் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அவரின் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் ரொக்கம், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள், அவரின் பி.எம்.டபிள்யூ. கார் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிகிறது.

ஆனாலும், இதுவரை ஹேமந்த் சோரன் எங்கிருகிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், அண்டை மாநிலங்களுக்கும் தகவல் உள்ளதுடன், அண்டை மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கார் மூலம் ராஞ்சிக்கு ஹேமந்த் சோரன் திரும்பி வருவதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளன.

இதனிடையே, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லம், அமலாக்கத்துறை அலுவலகம், ஆளுநர் மாளிகை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறலாம் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Share this story