தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்ப மனு..

By 
tutuu

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுகவை பொறுத்தவரை, மக்களவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணி பேச்சு நடத்தும் குழு, கணிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் 5 பேர் கொண்ட குழு என மொத்தம் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்பமனுவையும் திமுக தலைமை பெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் விநியோகம் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கியது.

தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் மார்ச் 1ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ரூ.50 ஆயிரம் கட்டணத்துடன் மார்ச் 7ஆம் தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை திமுக தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பலரும் விருப்ப மனுக்களை சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. கனிமொழி விருப்ப மனு அளித்துள்ளார். ஏற்கனவே, கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 50க்கும் மேற்பட்ட மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி, மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். விருப்ப மனுவை சமர்ப்பித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., “தூத்துக்குடி தொகுதியில் 5 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன். மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறேன். மறுபடியும் அங்கு பணியாற்ற வாய்ப்பு கேட்டு உள்ளேன். வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அடுத்த 5 ஆண்டுக்கான திட்டங்களை அறிவிப்பேன்.” என்றார்.

முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப‌மனு தாக்கல் செய்வதை முன்னிட்டு, பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Share this story