காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் : போலீசார் விசாரணை..

kidnap

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 24). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமிகா (19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த மாதம் 18-ந்தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். பின்னர் கடந்த 25-ந்தேதி திருமணத்தை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்கள் ஊர் திரும்பினர்.

இதையறிந்த சுமிகாவின் தந்தை முருகேசன் தாயார் பத்மா உள்பட 12 பேர் கும்பலாக முருகன் வீட்டுக்குள் சென்று சுமிகாவை அழைத்துள்ளனர். ஆனால் சுமிகா அவர்களுடன் செல்ல மறுத்து விட்டார். அப்போது முருகனையும், அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் பேசிய கும்பல் சுமிகாவை பிடித்து இழுத்து ஒரு காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து முருகன் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். அதில், எனது மனைவி சுமிகாவை அவரது தந்தை முருகேசன், தாய் பத்மா, அண்ணன் சுமித் மற்றும் உறவினர்கள் உள்பட 12 பேர் சேர்ந்து காரில் கடத்தி சென்று விட்டனர். அவர்களிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என கூறியிருந்தார்.

புகாரின் பேரில் சுமிகாவின் பெற்றோர் முருகேசன்-பத்மா உள்பட 12 பேர் மீது கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவிகளின் கீழ் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ வழக்குப் பதிவு செய்தார். மேலும் கடத்தப்பட்ட சுமிகாவை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுமிகாவை தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக 5 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த குருத்திகா என்ற இளம்பெண் அவரது பெற்றோரால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல நெல்லையில் நடைபெற்ற இந்த சம்பவம் கூடங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Share this story