அ, ஜி - எழுத்துக்களை பயன்படுத்தக்கூடாது : மீறும் அரசு வாகனங்களுக்கும் அபராதம்

ga7

போக்குவரத்து விதி மீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, வாகன பந்தயத்தில் ஈடுபடுவது, அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்து விதமான மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கும் விதி மீறலுக்கு ஏற்ப, அபராதம் விதிக்கப்படுகிறது.

நேரடியாக களத்தில் நின்றும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையிலும், ஏ.என். ஆர்.பி. வகை கேமராக்கள் மூலமாகவும் விதிமீறல் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இதுதவிர, நிலுவை அபராதமும் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் கடந்த 4 மாதங்களில் ரூ.5.84 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இதே கால கட்டத்தில், போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து சுமார் ரூ.12 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விதிகளை மீறும் அரசு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விதிமீறும் அரசு பேருந்து உள்ளிட்ட அனைத்து அரசு வாகனங்களுக்கும் தற்போது போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. அரசு வாகன பதிவெண் பலகையில் (நம்பர் பிளேட் அரசு வாகனம் என்று குறிக்கும் வகையில் 'அ' என தமிழிலும், 'ஜி' என ஆங்கிலத்திலும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். இது விதிமீறல் என சுட்டிக்காட்டி பொதுமக்கள் பலர் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் புகைப்படத்துடன் புகார் தெரிவித்தனர். இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதை ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்ட வாகனத்தை பயன்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு தற்போது ரூ.500 முதல் ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தொடரும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

Share this story