சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்.! டாப் 10 லிஸ்டில் இருப்பவர்கள் யார் யார்?

By 
t10

‘மிகவும் சக்திவாய்ந்த இந்தியர்கள் 2024’ என்ற பட்டியல் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. அதில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருக்கிறார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 16வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரதமர் மோடி சக்திவாய்ந்த இந்தியர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அவர் மேலும் வலிமையாக வளர்ந்து வருகிறார். ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு 95.6 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

பிரதமர் மோடிக்குப் பிறகு மற்றொரு சக்திவாய்ந்த இந்தியர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. 2023 டிசம்பரில் நடைபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக மகத்தான வெற்றியைப் பெற காரணமாக இருந்தார்.

டாப் 10 லிஸ்டில் உள்ள அரசியல் கட்சி சாராத மூவரில் முதலில் வருபவர் மோகன் பகவத். ஆர்எஸ்எஸ் தலைவராக தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து வருகிறார். ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது பிரதமர் மோடியுடன் இருந்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு சட்ட பிரிவு 370 ஐ ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. தேர்தல் ஆண்டில், தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்று அதற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது, சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் வழங்கிய உத்தரவு ஆகியவை கவனிக்கப்பட்டன. இவரது தலைநீதிபதி பதவிக்காலம் வரும் நவம்பரில் முடிவடைகிறது.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது வலுவான இராஜதந்திர திறமையால் குடிமக்களை கவர்ந்துள்ளார். ரஷ்யாவின் எண்ணெய் தடைகள் மற்றும் காலிஸ்தான் பிரச்சினையின் போது அவரது கூர்மையான பதில்கள் இந்தியாவை வலுவான நிலையில் வைத்துள்ளன.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜகவின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர். அவரது மாநிலத்தில் தான் அதிக மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநில வளர்ச்சிக்காக கோடிக்கணக்கில் அதிக அளவு நிதியை ஒதுக்குகிறது.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மூத்த சகாவாக இருப்பவர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இவர் தனது 'டிரபிள்ஷூட்டர்' இமேஜ் காரணமாக கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அரசியல்வாதிகள் மத்தியிலும் மதிக்கப்படுகிறார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் மிக நீண்ட காலம் நிதி அமைச்சராக இருக்கும் பெண். அவரது தலைமையின் கீழ், இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 7% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஜே.பி. நட்டா பாஜக அமைப்பை வழிநடத்தி வரும் முக்கியத் தலைவர். தன்னைத்தானே முன்னிறுத்திக் கொள்ளாமல் கட்சியின் நலனில் கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறார். இதனால்தான் அவரது பாஜக தேசியத் தலைவர் பதவியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

101 பில்லியன் டாலர் சொத்துக்குச் சொந்தக்காரரான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி முதல் 10 சக்திவாய்ந்த இந்தியர்கள் பட்டியலில் உள்ள ஒரே தொழிலதிபர் ஆவார். அதானியின் நெருங்கிய போட்டியாளரான ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி 11வது இடத்தில் உள்ளார். ப்ளூம்பெர்க் தகவல்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 109 பில்லியன் டாலர்.

Share this story