ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் காதல் : கல்லூரி மாணவி கொலையில், கர்ப்பிணி வாக்குமூலம்..

 

murder44

கோவை அருகே உள்ள இடையர் பாளையத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் சுப்புலட்சுமி (வயது 20). கல்லூரி மாணவி. இவர் பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சுஜய் (27), அவரது மனைவி 8 மாத கர்ப்பிணியான ரேஷ்மா (23) ஆகியோர் சுப்புலட்சுமியை குத்திக்கொலை செய்தது தெரிய வந்தது.

கேரள மாநிலம் கண்ணூரில் பதுங்கி இருந்த தம்பதியை நேற்று போலீசார் கைது செய்தனர். ரேஷ்மாவிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் கேரள மாநிலம். நான் கோவை இடையர்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அப்போது அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த எனது கணவரான சுஜயுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். அடுத்து சில மாதங்களில் நான் குடும்ப சூழ்நிலை காரணமாக எனது காதலனை பிரிந்து கேரளாவுக்கு சென்றேன்.

அதன்பின்னர் சுஜய், கவுண்டம்பாளையத்தில் புதிய நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி வேலைக்கு சேர்ந்து உள்ளார். அவர் வேலைக்கு வரும் போது அவரை ஒரு வாலிபர் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனை அவர் சுஜயிடம் கூறி உள்ளார். உடனடியாக அவர் அந்த வாலிபரை எச்சரித்து பிரச்சினையை சரி செய்து உள்ளார். இதனால் எனது கணவர் மீது சுப்புலட்சுமிக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறி உள்ளது. சுஜய் என்னை காதலிப்பதை மறைத்து சுப்புலட்சுமியுடன் பழகி வந்தார்.

கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சுஜயை நான் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது மீண்டும் எங்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. பின்னர் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். இதன் காரணமாக நான் கர்ப்பமானேன். தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளேன். இந்தநிலையில் எனது கணவர் அடிக்கடி எனக்கு தெரியாமல் சுப்புலட்சுமியுடன் பேசி வந்தார்.

இதனையடுத்து நான் அவரை கண்டித்தேன். அப்போது எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் என்னை விட்டு எனது கணவர் பிரிந்து சென்று விடுவாரோ என்ற பயத்தில் இருந்த நான் சுப்புலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வாருங்கள், பேசி தீர்த்து கொள்ளலாம் என கூறினேன். சம்பவத்தன்று சுப்புலட்சுமியை எனது கணவர் எங்களது வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் இருந்த என்னை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார்.

அப்போது தான் எனது கணவர் என்னை திருமணம் செய்ததை மறைத்து சுப்புலட்சுமியுடன் பழகியது எனக்கு தெரியவந்தது. நான் சுப்புலட்சுமியிடம் எங்களுக்கு திருமணம் ஆகி விட்டது. தற்போது கர்ப்பமாக உள்ளேன். எனவே எனது கணவரிடம் பேசுவதையும், பழகுவதையும் கைவிட வேண்டும் என கூறினேன். அவர் எனது கணவரை தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

2 பேரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டோம். இதில் ஆத்திரம் அடைந்த நான் அங்கு இருந்த கத்தியை எடுத்து சுப்புலட்சுமியின் வயிற்றில் குத்தினேன். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். எனது கணவர் சத்தம் வெளியே வராமல் இருக்க மற்றொரு கத்தியை எடுத்து அவரது கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சுப்புலட்சுமி துடிதுடித்து இறந்தார்.

பின்னர் நாங்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கேரளாவுக்கு தப்பி சென்றோம். கண்ணூர் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார். பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட சுஜய், ரேஷ்மா ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

 

Share this story