மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு.. முக்கிய நிகழ்வுகள்..

By 
alanga3

பொங்கல் பண்டிகையன்று மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. தமிழ்நாட்டில் முதன்முதலாக மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகபிரசித்தி பெற்றது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனியாக இடம் எதுவும் இல்லாமல் ஊருக்குள்ளேயே நடைபெற்று வந்தன. வாடிவாசல் அருகேயுள்ள பிரதான காலரியையும் பெரும்பாலும் விஐபிக்கள் ஆக்கிரமித்து விடுவதால், ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பொதுமக்கள், வெளிநாட்டினருக்கு இடம் கிடைப்பதில்லை.

இப்பிரச்சினைகளை களையும் பொருட்டு, ஜல்லிக்கட்டை அனைத்து தரப்பினரும் கண்டுகளிக்க ஏதுவாக, அலங்காநல்லூர் அருகே கீழக் கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி ரூ.44 கோடி மதிப்பில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் உலகத் தரத்தில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத் தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது, இந்த மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கவுள்ளார். இதற்காக அவர் நாளை காலை மதுரை வரவுள்ளார். காலை 10 மணிக்கு  ஜல்லிக்கட்டு மைதானம் திறந்துவைக்கப்பட உள்ளது. விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும், புதிய அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்த  ஜல்லிக்கட்டி போட்டியானது ஜனவரி 24ஆம் தேதி (நாளை) முதல் ஜனவரி 28 வரை 5 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தமாக 9,312 ஜல்லிக்கட்டு காளைகளும், 3669 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதில், முதற்கட்டமாக நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும், 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியை முதல்வர் ஸ்டாலின் கண்டுகளிக்க உள்ளார். அதேசமயம், ஜல்லிக்கட்டு போட்டிகளை ஐந்து நாட்கள் நடத்துவதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. எனவே, எத்தனை நாட்கள் போட்டி நடைபெறவுள்ளது என்பது நாளை அதிகாரப்பூர்வமாக  தெரிந்து விடும்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே  கீழக்கரை பகுதியில் 67 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.44 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தில், ஒரே நேரத்தில் சுமார் 5 ஆயிரம் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை காணும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. தரை தளம், முதல்தளம், இரண்டாம் தளம் என 3 தளங்கள் கொண்டு இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

16,921 சதுர அடி கொண்ட தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான இடமும், காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவிக் கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், தற்காலிக விற்பனைக் கூடம், பொருட்கள் பாதுகாப்புப் பெட்டகம், தங்கும் அறைகள் உள்ளன. முதல் தளம் 9,020 சதுர அடியிலும், இரண்டாவது தளம் 1,140 சதுர அடியிலும் அமைக்கப்பட்டுள்ளது.

Share this story