இந்தியாவை பெருமைப்படுத்துகிறது : தங்கம் வென்ற சிங்கப்பெண்களுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து

By 
gwi

டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

75 கிலோ எடைப்பிரிவில் இன்று [27.3.2023 நேற்று] நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின் பார்க்கரை 5-2 என லவ்லினா வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், இன்று 50 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் (வயது 26), வியட்நாமைச் சேர்ந்த நிகுயென்னை 5-0 என வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளார்.

இந்நிலையில், தங்கம் வென்ற நீகத் ஜரீன் மற்றும் லவ்லினா போர்கோஹைன் ஆகியோருக்கு பிரதமர் மோடி பராராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் அற்புதமான சாதனைக்காக வாழ்த்துகள் லவ்லினா போர்கோஹாய். போட்டியில் அவர் அபார திறமையைக் காட்டினார். அவர் தங்கப் பதக்கம் வென்றதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் அற்புதமான வெற்றி மற்றும் தங்கம் வென்றதற்காக நிகத் ஜரீனுக்கு வாழ்த்துகள். அவர் ஒரு சிறந்த சாம்பியன். தங்களின் வெற்றி பல சந்தர்ப்பங்களில் இந்தியாவை பெருமைப்படுத்துகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this story