தேர்தல் களம்: பிரதமர் மோடியை எதிர்த்து, மம்தா பானர்ஜி போட்டி..?

By 
mamata9

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட வேண்டும் என்று அம்மாநில பாஜக மகளிரணி தலைவர் அக்னிமித்ர பால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அக்னிமித்ர பால் கூறுகையில், ”தொகுதி பங்கீடு செய்வதற்கு முன்பாக மம்தா பானர்ஜிக்கு தைரியம் இருந்தால் பிரியங்கா காந்தி இடத்தில் அவர் போட்டியிட வேண்டும். அவருக்குப் பிரதமராகும் விருப்பம் இருக்கிறதல்லவா? பிரதமர் மோடியை எதிர்த்து நமது முதல்வர் போட்டியிட வேண்டும். பார்க்கலாம் அவருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கிறது என்று" என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணியின் 4வது கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, “வரும் மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து இண்டியா கூட்டணி வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும்” என்று முன்மொழிந்தார்.

முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் நட்சத்திர தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிட்டதால் அங்கு பிரியங்கா போட்டியிடுவது கைவிடப்பட்டது. இண்டியா கூட்டணி கூட்டத்துக்கு பின்னர் பேசிய மம்தா பானர்ஜியிடம், பிரியங்கா காந்தி போட்டியிடுவது பற்றி கேட்டபோது, கூட்டத்தில் நாங்கள் என்ன விவாதித்தோம் என்று அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது என்று தெரிவித்திருந்தார்.

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கான எதிர்ப்பை வலுப்படுத்த இண்டியா கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சைத் தொடங்கவும், ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை உருவாக்கவும் தேர்தல் அறிக்கையை இறுதி செய்யவும் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார். இண்டியா கூட்டணி கூட்டத்தின் போது, இந்தமாதம் (டிச.31) இறுதிக்குள் தொகுதி பங்கீடு பற்றி இறுதி செய்யுமாறு கூட்டணிக்கட்சிகளை மம்தா வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this story