540 கோடி ரூபாய் செலவில் நவீன ஃபிலிம் சிட்டி: "கலைஞர் 100" விழாவில் உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்..

By 
kk100

சென்னையில் நேற்று கலைஞர் நூற்றாண்டு விழா இனிதே நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த விழாவில் பங்கேற்று கலைஞர் குறித்து பேசி உள்ளனர்.

கலைஞர் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்கவிருந்த நிலையில் சென்னையை கடுமையாக தாக்கிய மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ச்சியாக இந்த விழா தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி "கலைஞர் 100" பெருவிழா கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் அரங்கில் நடைபெற்று முடிந்துள்ளது. 

நேற்று மாலை 5:30 மணிக்கு மேல் தொடங்கிய இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சூர்யா உள்ளிட்ட பலரும், கலைஞருடன் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இருப்பினும் இந்த நிகழ்விற்கு அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் வராதது பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.

இந்நிலையில் இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை கூறினார். அதன் பிறகு தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் உள்ள பூந்தமல்லியில் சுமார் 540 கோடி ரூபாய் மதிப்பில் நவீன ஃபிலிம் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக கூறினார். 

சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பில் 4 படபிடிப்பு தளங்களுடன், அனைத்து பணிகளும் நடைபெறும் அளவில் மிகப்பெரிய ஃபிலிம் சிட்டி அமைக்கப்படும் என்றும் அதில் 5 நட்சத்திர ஓட்டல் வசதியும் அமைக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். இதற்கு கலைத்துறையினர் பெரிய அளவில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Share this story