தேர்தல் முடிவுக்கு முன்பே தமிழகம் வரும் மோடி.! அன்றே டெல்லி செல்லும் ஸ்டாலின்.. என்ன காரணம்? 

By 
j1

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், இறுதி கட்ட தேர்தல் வருகிற ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.

இந்தநிலையில் நாளை மறு தினத்தோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ள வாக்கு எண்ணிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் வியாழக்கிழமை (மே 30 ஆம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி  படகு மூலம் விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று தியான மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளார்.

கன்னியாகுமரியில் இருக்கும் இந்த பாறை சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்வில் சாரநாத் சிறப்பு இடத்தைப் பெற்றிருப்பதைப் போல, சுவாமி விவேகானந்தரின் வாழ்விலும் இந்தப் பாறை ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்று மக்கள் நம்புகிறார்கள். விவேகானந்தர் நாடு முழுவதும் அலைந்து திரிந்து கன்னியாகுமரி வந்து 3 நாட்கள் தியானம் செய்து, வளர்ந்த இந்தியாவை நோக்கிய பார்வையை திருப்பியதாக கூறப்படுகிறது.

 ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தல் முடிவிற்கு முன்பாகவும் பிரதமர் மோடி ஆன்மீகம் பயணம்  செல்வது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்  2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு முன்பாக. சிவாஜியின் பிரதாப்கர்ப் பகுதிக்கு சென்றார்.2019ஆம் ஆண்டு கேதார்நாத்துக்குச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்று இரண்டு நாட்கள் தியானம் மேற்கொள்ள உள்ளார்

அதே நேரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லவுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ம் தேதி வெளியாக உள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஆலோசனை கூட்டத்தில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் செயலாற்றியது குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் முக்கியமாக தேர்தல் முடிவுக்கு பின் இந்தியா கூட்டணி எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது பற்றியும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். ஜூன் 1 தேதி காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.

Share this story