நீச்சல் பயிற்சியின்போது விபரீதம் தாய், 2 குழந்தைகள் பலியான பரிதாபம்..

By 
deads2

வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9), மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது குழந்தைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றிற்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி, இன்று  பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கியுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வீடு திரும்பாத நிலையில், சிறுமி நித்திகா ஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கோடைகாலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளவேண்டும். மேலும், நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story