இசையோடு இசையானார்..! ஆங்கிலம் உள்பட 5 மொழிகளில் இசையமைத்துள்ளார் பவதாரிணி..

By 
bhavatharini1

இளையராஜா மகள் பவதாரிணி புற்றுநோயால் போராடி வந்த நிலையில், இயற்கை மருத்துவ முறையை மேற்கொள்ள இலங்கைக்கு சென்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணி அளவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பவதாரிணி, இசைஞானி இளையராஜாவின் மகள் என்பதை தாண்டி, ஒரு பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். 

இவர் குழந்தையாக இருக்கும் போதே தன்னுடைய தந்தை, இளையராஜா இசையமைத்த 'மை டியர் குட்டிச்சாத்தான்' மலையாள படத்தில் Thithithey Thaalam என்கிற பாடலை பாடினார்.

இதை தொடர்ந்து, பிரபு தேவா நடிப்பில் 1995-ஆம் ஆண்டு வெளியான 'ராசையா' சூப்பர் ஹிட் பாடலான மஸ்தானா மஸ்தானா பாடலை பாடினார். இவருடைய குரல் பல ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்தடுத்து பல தென்னிந்திய மொழி படங்களில் பாடினார். குறிப்பாக 'பாரதி' படத்தில் இவர் பாடிய, 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடல் தேசிய விருதை பெற்றது.

பின்னணி பாடகியாக இருக்கும்போதே, தன்னுடைய அப்பா மற்றும் சகோதரரை தொடர்ந்து இசையமைப்பாளராக கடந்த 2002 ஆண்டு, ஆங்கில படமான 'மிடிர் மை ஃபிரென்ட்' என்கிற படத்திற்கு இசையமைத்தார்.

இதை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அவுன்னா என்கிற படத்திற்கு இசையமைத்தார். பின்னர் ஹிந்தியில் ஷில்பா ஷெட்டி நடிப்பில் வெளியான Phir Milenge படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் இசை நல்ல பாராட்டுகளை பெற்றபோதும் தொடர்ந்து இவரால் ஹிந்தியில் இசையமைக்க முடியாமல் போனது.

2005 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான 'கீயா கீயா' என்கிற படத்திற்கு இசையமைத்த பவதாரணி, பின்னர் தமிழ் படங்களுக்கு இசையமைக்க துவங்கினார். அந்த வகையில், அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி, போரிட பழகு, கள்வர்கள், மாயநதி போன்ற படங்களாகும். தன்னுடைய கணவரின் ஹோட்டல் பிஸ்னஸை ஒரு புறம் கவனித்து வந்த இவர், இண்டிபெண்டெண்ட் ஆல்பங்கள் உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார்.

கடைசியாக 2019-ஆம் ஆண்டு இசையமைத்த மாயநதி படத்தை தொடர்ந்து, 3 படங்களில் இசையமைக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படங்களை இசையமைக்க துவங்குவதற்கு முன்பே, கேன்சர் நோயால் தீவிர பாதிப்பு ஏற்பட்டு, இயற்கை மருத்துவ முறையை மேற்கொள்ள இலங்கைக்கு சென்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணி அளவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பவதாரணியின் இழப்பு ஒட்டு மொத்த திரையுலக பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலர் தங்களின் இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

Share this story