ஜூன் 8ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்கிறார்! முதல் முறையாக ஹாட்ரிக் சாதனை..

By 
modiji14

பாஜகவைச் சேர்ந்த நரேந்திர மோடி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வரும் ஜூன் 8ஆம் தேதி 3வது முறையாக பிரதமராகப் பதவியேற்க இருக்கிறார். பதவியேற்ற உடனே மோடி ஒரு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றும் அதற்காக வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்துவருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியுள்ள ஆட்சி அமைக்க உள்ளது. மீண்டும் பிரதமராக மோடியே பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக ஆட்சி அமைப்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இச்சூழலில், டெல்லியில் இன்று என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெற்றது.. இந்தக் கூட்டத்தில் கிங் மேக்கராக உருவாகி இருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், ஜேடிஸ் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து நாளை என்.டி.ஏ. ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டமும் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இன்றைய  கூட்டத்துக்குப் பிறகு, நரேந்திர மோடியும் சந்திரபாபு நாயுடுவுடன் தனியாக சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவையில் பாஜக 240 இடங்களில் வெற்றி அடைந்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை ஆந்திர மாநிலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாயுடு, "தேசிய ஜனநாயக கூட்டணி உடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம்" என்று தெரிவித்தார். ஆந்திர மக்களின் நலனுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி கூறியுள்ளார்.

என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பீகார் மாநில ஜே.டி.எஸ். கட்சியும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 232 இடங்களை வென்றுள்ளது. அவர்களும் இன்று டெல்லியில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

Share this story