அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது அவசியம்: அண்ணாமலை அதிரடி

By 
japar

போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில், "சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பண மோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

ஜாபர் சாதிக் கைது: சமீபத்தில் டெல்லியில் கைப்பற்றப்பட்ட ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜாபர் சாதிக் இன்று என்சிபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஜெய்ப்பூரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கைதை உறுதிப்படுத்தியுள்ள என்சிபி அதிகாரிகள், முழு விவரங்களை மதியம் 2 மணிக்கு மேல் சொல்வதாக தெரிவித்துள்ளனர். தற்போது ஜாபர் சாதிக்கிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர் அதிகாரிகள்.

Share this story