சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை: பிரதமர் மோடி

By 
siru1

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை எனவும், பாஜக அவர்களுக்கு எதிராக இன்று மட்டுமல்ல, ஒருபோதும் செயல்படவில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதேசமயம், யாரையும் சிறப்புக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி வகுப்புரீதியாக பிளவுபடுத்தும் பேச்சுகளை பேசி வருவதாக எதிர்க்கட்சியின் குற்றம் சாட்டி வரும் நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் சிறுபான்மையினரைப் பற்றி தெளிவான கருத்துக்களை மோடி முன்வைத்துள்ளார்.

அரசியலமைப்பின் மதச்சார்பற்ற உணர்வை காங்கிரஸ் தொடர்ந்து மீறுவதாகவும், வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சியை அம்பலப்படுத்துவதை நோக்கமாக கொண்டதே தனது தேர்தல் பிரசாரம் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

உங்களது பேச்சுகளால் சிறுபான்மையினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராகத்தான் பேசுகிறேன். அரசியல் சாசனத்திற்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது, அதைத்தான் நான் கூறி வருகிறேன்.” என்றார்.

இடஒதுக்கீடு கிடையாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோர் முடிவு செய்ததாக பிரதமர் மோடி கூறினார். “இப்போது நீங்கள் அதிலிருந்து விலகி இருக்கிறீர்கள். அவற்றை வெளிக்கொணர வேண்டியது என் பொறுப்பு. அப்போது அரசியல் நிர்ணய சபையில் எனது கட்சி உறுப்பினர்கள் யாரும் இல்லை. நாடு முழுவதிலுமிருந்து வந்த பிரபலங்களின் கூட்டம் அது.” என பிரதமர் மோடி கூறினார்.

அவரது தேர்தல் பேச்சுகளில் சிறுபான்மையினரை குறிவைக்க வில்லையா என்ற கேள்விக்கு, “பாஜக ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக இருந்ததில்லை. இன்று மட்டுமல்ல என்றுமே இருந்ததில்லை. அவர்களை திருப்திப்படுத்தும் அரசியலை காங்கிரஸ் செய்கிறது.” என பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். அவர்களுடைய அரசியல் திருப்திப்படுத்தும் அரசியல்; என்னுடைய அரசியல் 'சப்கா சாத் சப்கா விகாஸ் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

மேலும், “நாங்கள் 'சர்வ தர்மத்தை' நம்புகிறோம். அனைவரையும் எங்களுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறோம். நாங்கள் யாரையும் சிறப்புக் குடிமக்களாக ஏற்கத் தயாராக இல்லை, ஆனால் அனைவரையும் சமமாகக் கருதுகிறோம்.” எனவும்  பிரதமர் மோடி கூறினார்.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு டெண்டர் விடப்படும் என்று உறுதியளிக்கிறது என்று அவர் கூறினார். “நீங்கள் ஒரு பாலத்தை உருவாக்க விரும்புகிறீர்கள். டெண்டருக்கு யார் ஏலம் எடுப்பார்கள்? வளங்கள், நிபுணத்துவம், தொழில்நுட்பம் உள்ள ஒருவர். ஆனால் அங்கேயும் இட ஒதுக்கீடு கொண்டு வர விரும்பினால், என் நாட்டின் வளர்ச்சி என்னவாகும்?” என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

“நமது அரசியல் சாசனத்தில் உள்ள மதச்சார்பின்மை உணர்வை தங்களின் தேர்தல் அரசியலுக்காக அழித்தவர்கள் இவர்கள்தான். அரசியலமைப்பின் அந்த உணர்வை மீட்டெடுக்க விரும்புகிறேன். அதனால் தான் இவர்களை அம்பலப்படுத்த வேண்டும்.” என பிரதமர் மோடி கூறினார்.

Share this story