ஆப்கனில் புதிய அரசு : 7 பேரில் ஒருவர் அதிபர்.? தலிபான் குழு முடிவு..

By 
New government in Afghanistan One in 7 presidents Taliban group decision .

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதால், அந்த நாட்டை 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர்.

என்றாலும் ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்களில் தலிபான்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தலிபான்களுக்கும், மாகாண குழுக்களுக்கும் இடையே, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் முயற்சியில், தலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதுதொடர்பாக, தலிபான் குழுக்களிடையே தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

புதிய ஆட்சி :

தலிபான்களில் மூத்த தலைவர்களாக இருக்கும் 7 பேரில் ஒருவரை அதிபராக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

தலிபான் தலைவர்கள் தற்போது காபூலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்த பிறகு புதிய ஆட்சி தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து, தலிபான் செய்தி தொடர்பாளர் முஜாகித் கூறுகையில், 'ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்' என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானில் பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் உள்ள குழுக்களுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். 

அதில், ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதும் புதிய ஆட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லா கனி :

தலிபான் அமைப்பை நிறுவிய முல்லா உமரின் மகன், முல்லா கனி பரதர். இவர் புதிய அதிபராக பொறுப்பேற்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு, உடைகள் மற்றும் தினசரி தேவை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

பர்தாக்களின் விலை 17 மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது. தலிபான்களின் எச்சரிக்கை காரணமாக பர்தா உடைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் சேவை துண்டிப்பு :

வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய தலிபான்கள் முயற்சி செய்கிறார்கள். 

ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு தோழமையாக இருக்கும் நாடுகள் கூட விமான சேவையை ரத்து செய்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளையும் துண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story