சென்னையில், புதுவித வைரஸ் காய்ச்சல் பரவல் : டாக்டர்கள் அறிவுறுத்தல்..

By 
virus

சென்னை மக்களை வைரஸ் காய்ச்சல் ஒன்று பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறது. சளி மற்றும் வரட்டு இருமலில் தொடங்கும் இந்த காய்ச்சல் கடுமையான உடல் வலியையும் கூடவே அழைத்து வருகிறது.

காய்ச்சல் வந்துவிட்டால் எழுந்து உட்கார முடியாத அளவுக்கு தலைவலி, இருமல் ஆகியவை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கிறது. அதனுடன் கை, கால் மூட்டு வலி உள்ளிட்டவையும் சேர்ந்து கொண்டு எப்போதும் படுத்தே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன.

இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு பனி காலத்தில் கொசு உற்பத்தி சென்னையில் மிக அதிகமாக உள்ளது. அதிகாலையில் அதிக அளவிலான பனிப்பொழிவு இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கொசுக்கள் மூலமாக டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல் பரவும் நிலையில் புழு வைரஸ் என்ற புதுவித வைரஸ் தொற்றும் பரவி மக்களை காய்ச்சலில் தள்ளிக் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகிறது.

வழக்கமாக காய்ச்சல் தலைவலி வந்தால் மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால் இந்த காய்ச்சல் சரியாவதற்கு 15 நாட்கள் வரை ஆகிறது. இந்த 15 நாட்களும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு உடல் சோர்வை சந்திக்க நேரிடுகிறது. மூக்கடைப்பு ஏற்பட்டு சுவாசிப்பதற்கும் சிரமமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்த சளித்தொல்லை சிலருக்கு அதிகமாகி நுரையீரலில் போய் சளி கெட்டியாக தேங்கி விடுகிறது. இது இரவு நேரத்தில் தூக்கத்தையும் கெடுத்து விடுகிறது. இது போன்ற நேரங்களில் நெபுலேசர் வழியாக மருந்தை செலுத்தி சளியை கரைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

காய்ச்சல் பாதிப்பு அதிகமாகும் போது, சிலருக்கு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் திடீரென குறைந்து விடுகிறது. இது போன்ற பாதிப்புக்குள்ளாகும் நபர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. எனவே லேசான சளி தொல்லை மற்றும் இருமல் ஏற்படும் போதே டாக்டர்களிடம் சென்று உடலை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

சளி பிரச்சினை ஏற்பட்டால் மருந்து கடைகளில் சென்று டாக்டர் சீட்டு இல்லாமல் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வது நல்லது அல்ல என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள். இது போன்ற நேரங்களில் உடலில் இருக்கும் சளியை வெளியேற்றவே மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டும். மருந்து கடைகளில் நாமாகவே வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் சளியை உடலுக்குள்ளேயே தேங்கச் செய்து விடும். இது நாளடைவில் இருமலை அதிகப்படுத்தி மூச்சு விடுவதற்கும் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.

எனவே தற்போதைய சூழலில் காய்ச்சல், சளிக்கு டாக்டர்களிடம் உரிய பரிசோதனை செய்த பிறகே மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர். மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்ட பிறகும் காய்ச்சல் சரியாகவில்லை என்றால் ரத்த பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனால் ரத்த பரிசோதனை கூடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்ட போது, வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் பனி சீசன் முடியும் வரையில் குளிர்ச்சியான காய் மற்றும் பழங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

Share this story