பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை: எடப்பாடி பழனிசாமி..

By 
budjet11

நடப்பாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 22ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டின் பட்ஜெட்டிற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்  சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்கள். எப்போதும் போல்தான் அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை.” என்றார்.

கிராமப்புறங்களில் சாலைகளை சீரமைக்க குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடன் பெற்றுதான் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, 8 லட்சம் கோடிக்கு அதிகமான கடனை தமிழக அரசு வைத்துள்ளது. கடன் வாங்குவதில் நம்பர் ஒன் தமிழ்நாடு தான் என்றார்.

மேலும், “தமிழக பட்ஜெட் கனவு பட்ஜெட் என சொல்கிறார்கள். ஆனால் அது கானல் நீர் போன்றது, மக்களுக்கு பயன் தராது. அதிமுக ஆட்சியை விட தற்போது கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை.” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Share this story