தந்தை கிடையாது, மரண படுக்கையில் தாய்; விடா முயற்சியால் 4 பாடங்களில் சதம் அடித்து சாதித்து காட்டிய மாணவி..

By 
kanya3

சுயநினைவற்ற தாயை பராமரித்துக் கொண்டு பிரதான பாடங்கள் அனைத்திலும் சதம் அடித்து கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி, ராதா தம்பதியரின் இரண்டாவது மகள் கோகிலா தனது தந்தையை இழந்து, விபத்தில் தனது தாய் சுய நினைவை இழந்தும் மனம் தளராமல் தனது சகோதரி மற்றும் பெரியம்மாவின் பொருளாதார உதவியால் மிகவும் கஷ்டபட்டு  கோகிலா 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நான்கு பாடங்களில் சதம் அடித்து 600க்கு 573 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது தொடர்பாக மாணவி கோகிலா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 2012 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் தனது தாய்  ராதா சுயநினைவை இழந்து விட்டார். தந்தையின் பராமரிப்பில் இருந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு எனது தந்தையும் உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்து விட்டார். இதை அடுத்து தனது சகோதரி சுகுமாரி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து குடும்ப செலவுக்கு பணம் அனுப்பி வந்தார். 

நான் சுயநினைவை இழந்த தனது தாயே பராமரித்துக் கொண்டு எனது பனிரெண்டாம் வகுப்பை படித்து முடித்துள்ளேன். இதில் பிரதான பாடங்கள் அனைத்திலும் சதம் அடித்து உள்ளேன். மேலும், எனது சகோதரி சுகுமாரி எனது படிப்பிற்காக அவரது படிப்பை விட்டு விட்டு தற்போது வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். பொருளாதார உதவி அவளுக்கும் கிடைத்தால் அவளும் நிச்சயமாக படிப்பார். 

வறுமையின் பிடியில் இருக்கக்கூடிய சூழலில் தனது பெரியம்மா மாரியம்மாள் தான் அரவணைத்து உள்ளார். எனது கல்லூரி மேற்படிப்பிற்கும், எனது அக்கா சுகுமாரியின் மேற்படிப்பை தொடர்வதற்கும் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் யாரேனும் உதவி கரம் நீட்ட முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Share this story