மாணவர்களுக்கு ஆன்லைன் ஆப்லைன் முறையில் தேர்வு மதிப்பீடு : கல்வித்துறை ஏற்பாடு

By 
final2

தமிழக பள்ளிக்கல்வித் துறை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்கள் மதிப்பீட்டுத் தேர்வை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வருகிற 17 முதல் 21 வரை நடைபெறுகிறது. இதில் 60 மதிப்பெண்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு மாணவர்கள் தங்கள் ஆசிரியரின் கைபேசியில் இருந்து தேர்வெழுத ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.

இதில் பாடங்கள் கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சோதிக்கப்படும். இந்தக் கேள்விகள் அனைத்தும் ஒரு வரி கேள்விகளாக இருக்கும். ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் செயலி மூலம் பள்ளிக் கல்வித்துறை அனுப்பும் கேள்விகளை மாணவர்களிடம் கேட்பார்கள். அவர்களின் பதிலை அதில் பதிவு செய்வார்கள்.

இதில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் எண்ணும், எழுத்தும் திட்ட புத்தகத்திலிருந்து மட்டுமே இடம்பெறும். பாடப் புத்தகத்தில் இருக்கும் கேள்விகள் கேட்கப்பட மாட்டாது. நான்காம் வகுப்பு முதல் பாடப் புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மேலும் 40 மதிப்பெண்களுக்கு வளர் அறி மதிப்பீடு என இருவகையாகப் பிரித்து ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் தேர்வு நடத்தி மதிப்பீடு செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

இதில் குழந்தைகளின் விளையாட்டு திறன், வாசிப்பு திறன் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்படும். 8 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும் எழுத, படிக்க மற்றும் அடிப்படை கணிதத்தை அறிந்து கொள்ள வசதியாக எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, நடனங்கள், பாடல்கள், கதைசொல்லல் மற்றும் பொம்மலாட்டம் மூலம் வாசிக்கும் மற்றும் எழுதும் திறன்களைக் கற்பித்தனர்.

ஆன்லைன் மதிப்பீடு என்பது பல்வேறு தேர்வு அடிப்படையிலான கேள்விகள் ஆகும். உயர்தர சிந்தனை திறன் மற்றும் அடிப்படையான கேள்விகளும் கேட்கப்படும், என்று கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மொபைல் போன்களில் சுருக்க மதிப்பீடுகளை நடத்துவது நேரத்தைச் செலவழிக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த தேர்வு முறை வருகிற 2025 கல்வி ஆண்டு முறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this story