ஆபரேசன் காவேரி : சூடானில் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் டெல்லி வந்தனர்..

 

sudan33

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூடானில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. சூடானில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற பெயரிலான திட்டத்தை இந்திய அரசு தொடங்கி உள்ளது.

அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக கப்பல்களும், விமானங்களும் தயாராக உள்ளன. இதன்படி, சூடானின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இந்தியர்கள் சுமார் 500 பேர் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.

அதன்பின், இந்தியாவின் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். சுமேதா உதவியுடன் அவர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து 360 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இன்று மாலை புறப்பட்ட தனி விமானம் புதுடெல்லி வந்து சேர்ந்தது. இத்தகவலை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

அதில், 'இந்தியா தனது சொந்தங்களை மீண்டும் வரவேற்கிறது. ஆபரேசன் காவேரி மூலம் 360 இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் முதல் விமானம் புதுடெல்லியை அடைந்தது' என தெரிவித்துள்ளார்.
 

Share this story