ஓபிஎஸ் தந்த ஒப்பில்லா பரிசு; உச்சநீதிமன்றம் ஓங்கி ஒலித்த உயரிய முரசு..

By 
jallikattu6

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மனிதர்களுக்கு சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை என நீதிபதி ஜோசப் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். 

ஜல்லிக்கட்டு போட்டிகளை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தபிறகு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள தமிழ்ப் பண்பாட்டுக் கவியுரை வருமாறு :

* குடும்ப அட்டைகளில் பெயர் குறிப்பிடப்படாத,
வீட்டு குழந்தைகளாக வளர்க்கப்படும்
ஜல்லிக்கட்டு காளைகளை, 
காட்சிப்படுத்தும் பட்டியலில் சேர்த்து,
 
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது
அன்றைய காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சி.

'கொல்லேற்று கோடஞ்சுவானை
மறுமையிலும் புல்லாளே ஆயமகள்' என்றே
சிலம்பு காவியமும்

கலித்தொகையும்
பெரும்பானாற்றுப்படையும்
சீர்தூக்கிப் பாடிய

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு
எருதுகட்டு என்பதெல்லாம்..

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
முன்தோன்றிய மூத்த குடியின்
வீரவிளையாட்டு என்பதை
விளங்காத கூட்டம்,

காளைகளை துன்புறுத்துவதாய் சொல்லி
தமிழர் தம் பண்பாட்டுப் பெருமையான
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

இதனால், ஒன்பது வருடங்கள் 
களையிழந்து போனது தமிழகம்.. 

காளை மாடுகள் எல்லாம்
இறைச்சிக்கு மட்டுமே இரையானது.

நாட்டு மாட்டினமே அழிந்து,
சீமை மாடுகள் இறக்குமதியாக..

பூர்வீக தமிழகத்தில்
புதுப்புது வியாதிகள்
புற்றீசல்போல் பிறந்தன

ஆனாலும்..

பச்சைத்தமிழன் பன்னீர்செல்வம் என்கிற
ஒற்றை மனிதரின் அயராத உழைப்பும்,
வங்கத்து கடற்கரையில் வெடித்த
மெரீனா தன்னெழுச்சி புரட்சியும், 

ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிய
புதுப்பாதை வகுத்தது-அந்த 
புரட்சியும் வென்றது

* ஆம்..புதுடெல்லி சென்ற
அன்றைய முதலமைச்சர்
அம்மாவின் விசுவாசப் பிள்ளை
ஓ.பி.எஸ். என்கிற 
அந்த மூன்றெழுத்து மந்திரம், 

தலைநகரில் முகாமிட்ட
எழுபத்தி இரண்டு மணி நேரத்தில்
தடை உடைந்தது; விடை பிறந்தது.

காளைகளை பிடித்துக் கொண்டு
சாலைகளில் நடந்தாலே 
கைது என்னும் கருப்புக் காலங்கள் 

கிளர்த்தெழுந்த 
எதிர்ப்பு என்னும்
நெருப்பு கோலங்களால்.. 

புறநானூற்று மண்ணில் இருந்து
புறமுதுகிட்டு ஓடியது-மீண்டும் 
ஜல்லிக்கட்டு என்கிற
பொற்கால பூபாளம்
புதுக்கோலம் பூண்டது.

பூட்டிக் கிடந்த வாடிவாசல்களின்
பூட்டுக்கள் உடைந்தன.

* கன்னியை அணைவதற்கு முன்
காளைகளோடு வெள்ளோட்டம் பார்க்கிற
எம் இனத்து வீரத்தமிழ் இளைஞர்களுக்கு..

ஒப்பில்லா பரிசாக 
மீண்டும் ஜல்லிக்கட்டு 
வீரத் தமிழ் மண்ணில்
விழாக் கோலம் பூண்டது என்றால்,

இது..
பத்துகோடி தமிழர்க்கு
பன்னீர்செல்வம் என்கிற
உத்தம தமிழன் தந்த
ஒப்பில்லா பரிசு அல்லவா?
 
இன்று, இதனை
உச்சநீதிமன்றமும்
உறுதி செய்திருக்கிறது என்றால்,

இது
தீந்தமிழர் 
வாழ்வில்

திருவிழா
கோலம்
அல்லவா.!

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story