'பெற்றோர்களே உஷார்' இடைத்தரகர்களை நம்பி ஏமாறாதீர் : கல்வித்துறை எச்சரிக்கை

 

females

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி (திங்கட்கிழமை) வெளியானது. இதில் முக்கியப் பாடங்களில் 100-க்கு 100 மதிப் பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு 23,957 பேர் 'சென்டம் பெற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 32,501 பேர் 'சென்டம் பெற்றிருப்பது உயர்கல்வி சேர்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.

அதே வேளையில், கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 690-ஆக குறைந்ததால், பி.இ. படிப்புக்கான கட்-ஆப் மதிப் பெண் நடப்பாண்டு குறைய வாய்ப்புள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பி.இ. படிப்பில் சேர வாய்ப்பு உருவாகியுள்ளது. கணக்கு பதிவியல் பாடத்தில் 6,573 பேரும், வணிகவியலில் 5,678 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் கல்லூரிகளில் பி.காம். படிப்பில் சேர்வதற்கு அலைமோதுகின்றனர்.

குறிப்பாக, ஒரு கல்லூரியில் 400 பி.காம் இடங்கள் இருந்தால், அதில் சேருவதற்கு சராசரியாக 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இது போட்டியின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பிரபல தனியார் கல்லூரிகளில் பி.காம். இடங்களைப் பெறுவதற்கான கட்-ஆப் மதிப்பெண் 99 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும். இது 100 சதவீதத்தை தொடவும் வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பி.காம். அக்கவுண்டிங் அண்ட் பைனான்ஸ், கார்ப்பரேட் செகரட்டரிஷிப், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், ஹானர்ஸ், ஆடிட்டிங், காஸ்டிங், மேனேஜ் மென்ட் அக்கவுன்டிங், பிசினஸ் லா, வங்கி மேலாண்மை, கணினிப் பயன்பாட்டியல், தகவல் தொழில் நுட்பம், கேப்பிடல் மார்க்கெட் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற வழிவகுக்கின்றன.

கணக்கு துறையில் தொழில் ரீதியாக வளர விரும்புவோர் தங்களுக்கான அடிப்படைத் தகுதியாக இந்தப் படிப்புகளைக் கருதுவதால் அவற்றில் சேர மாணவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். பி.காம் படிப்பில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், அதில் சேர்க்கை பெற்றுத் தருவதாக இடைத்தரகர்கள் சிலர் பெற்றோர்களிடம் பேரம் பேசி வருவதாகவும், பிற கல்லூரிகளில் இடத்தை உறுதி செய்ய ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

அதே வேளையில் இதுபோன்ற நபர்களை நம்பி பெற்றோர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என உயர்கல்வித் துறையும், தனியார் கல்லூரி நிர்வாகங்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

Share this story