நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டி படுகொலை; காதலி கண்முன்னே வெட்டி சாய்த்த கொடூரம்..

By 
draj

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை அடுத்த வாகைகுளம் பகுதியைச் சார்ந்தவர் தீபக் ராஜா (வயது 35). இவர்  மீது பல்வேறு கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் பெண் ஒருவரை அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அந்தப் பெண்ணின் நண்பர்களுக்கு திருமண விருந்து அளிப்பதற்காக கே டி சி நகர் பகுதியில் உள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு வந்துள்ளனர்.  

அனைவரும் உணவருந்தி விட்டு வெளியே வந்தபோது அங்கு மறைந்திருந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் உணவக வாசலிலேயே அரிவாளால் கை, முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் படுகாயமடைந்த தீபக் ராஜா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை உதவி ஆணையர்  பிரதீப் மற்றும் போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாநகர துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சோரா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு  ஆய்வு பணிகள் செய்யப்பட்டது. மேலும், கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மக்கள் நடமாட்டம்  மிகுந்த பகுதியில் பட்டப் பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதிய மோதல் தொடர்புடைய பல்வேறு கொலை சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ,இவர் மறைந்த பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முன் விரோதம் காரணமாக  அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Share this story