என் உரைகளைக் கேட்டு சோர்வடைகிறார்கள் மக்கள்..! - குட்டிக்கதையை சொல்லி பிரதமர் மோடி நகைச்சுவை..

By 
win8

என் உரைகளைக் கேட்டு மக்கள் சோர்வடைந்து விடுகிறார்கள்" என்று விருது வழங்கும் விழா மேடையில் பிரதமர் மோடி நகைச்சுவையாக கூறி கலகலப்பூட்டினார். மேலும் அவர் ஜாலியாக ஒரு குட்டிக் கதையையும் பகிர்ந்தார்.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முதல் முறையாக தேசிய படைப்பாளர் விருதுகளை வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி வழங்கினார். இந்திய செவ்வியல் மற்றும் நாட்டுப்புற இசையில் பயிற்சி பெற்ற பின்னணி பாடகி மைதிலி தாக்குர் ‘இந்த ஆண்டுக்கான கலாச்சாரத் தூதுவர்’ விருது பெற்றவராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு விருது வழங்கியப் பின்னர் பார்வையாளர்கள் முன்பு மைதிலியின் பாடும் திறமையை காட்டுமாறு பிரதமர் மோடி கூறினார்.

அப்போது பிரதமர், "நீங்கள் ஏன் ஏதாவது பாடக் கூடாது. நான் பேசுவதைக் கேட்கும் போதெல்லாம் மக்கள் சோர்வடைந்து விடுகிறார்கள்" என்றார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட மைதிலி, "நிச்சயமாக சார்" என்றார். 

இதனைத் தொடர்ந்து, "அப்படியென்றால் அவர்கள் (மக்கள்) என் பேச்சைக் கேட்டு சோர்வடைகிறார்கள் என்று ஏற்றுக்கொள்கிறீகளா?" என மைதிலியை பிரதமர் கேலி செய்தார். அதற்கு உடனடியாக சுதாரித்த மைதிலி, "இல்லை.. இல்லை.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. நிச்சயம் பாடுகிறேன் என்றே சொன்னேன்" என பதில் அளித்தார்.

அதேபோல, ‘க்ரீன் சாம்பியன் விருது’ பெற்ற அகமதாபாத் நகரில் வந்திருந்த பன்க்தி பாண்டேவிடம் உரையாடும்போது, அகமதாபாத் குறித்த நகைச்சுவை ஒன்றை பகிர்ந்து கொண்டார். 

உங்களால் அகமகதாபாத்தில் இருந்து வருபவர்களை அடையாளம் காண முடியுமா என்று பார்வையாளர்களைப் பார்த்துக் கேட்ட பிரதமர், தான் சிறுவயதில் கேட்ட கதையை நினைவு கூர்ந்தார்.

பிரதமர் கூறுகையில், “எனக்கு இதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் நான் சிறுவயதில் கேட்ட கதையை உங்களுக்கு கூறுகிறேன். 

ஒருமுறை ரயில் நிலையமொன்றில் ரயில் ஒன்று வந்து நின்றது. ரயிலின் மேல் பெர்த்தில் இருந்த பயணி ஒருவர் ஜன்னலுக்கு வெளியே நின்றவரிடம் இது எந்த நிறுத்தம் என்று கேட்டார். அதற்கு வெளியே நடைமேடையில் நின்றிருந்தவர், ‘

நீ எனக்கு நாலணா பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் பயன்படுத்தப்பட்ட பணம் கொடுத்தால் சொல்கிறேன்’ என்றார். 

பயணி உடனடியாக,‘தேவையில்லை. இது அகமதாபாத்தாக தான் இருக்க வேண்டும்’ என்றாராம்” என்று பிரதமர் கூறினார்.

தேசிய படைப்பாளர்கள் விருது என்பது, கதை சொல்லல், சமூக மாற்றத்தை வலியுறுத்துதல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கல்வி, விளையாட்டு போன்ற பிற துறைகளில் உள்ள சிறப்பு மற்றும் தாக்கத்தினை அங்கீகரிக்கும் முயற்சியாகும். இதன்படி, 20 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
 

Share this story