எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடி அறிவிப்பு..

By 
ratna

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், எல்.கே. அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "திரு எல்.கே. அத்வானி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவருடன் பேசி, அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது குறித்து வாழ்த்து தெரிவித்தேன்" என்று கூறியுள்ளார்.

"நமது காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அடிமட்டத்தில் இருந்து நமது நாட்டின் துணைப் பிரதமர் வரை பல நிலைகளில் நாட்டிற்காக சேவை செய்த வாழ்க்கை அவருடையது" என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

"அவர் உள்துறை அமைச்சராகவும், தகவல்தொடர்பு துறை அமைச்சராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றினார். அவரது நாடாளுமன்றச் செயல்பாடுகள் எப்பொழுதும் முன்னுதாரணமாகவும், செழுமையான நுண்ணறிவு நிறைந்ததாகவும் இருந்தன" என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அத்வானியுடன் இருக்கும் இரண்டு படங்களையும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக ரத யாத்திரை நடத்தியவர் எல்.கே.அத்வானி. அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின் அவருக்கு நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Share this story