முதல் தலைமுறை வாக்காளர்கள் 50 லட்சம் பேருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..

By 
t6

தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, முதல் தலைமுறை வாக்காளர்கள் 50 லட்சம் பேருடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 14ஆவது தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாப்படுகிறது. நாட்டு மக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் செயல்பாடுகளில் மக்களை பங்கேற்க ஊக்குவிக்கவும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், முதல் தலைமுறை வாக்காளர்கள் 50 லட்சம் பேருடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடவுள்ளார். தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து முதல் தலைமுறை வாக்காளர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடவுள்ளனர்.

பாஜக யுவ மோர்ச்சா ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேசிய வாக்காளர் தினத்தன்று மோடிக்கும் முதல்முறை வாக்காளர்களுக்கும் இடையிலான உரையாடல் நடைபெறும் என்று பாஜக யுவ மோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டில் மோடியை பிரதமராகத் தேர்ந்தெடுத்ததிலும், 2019ஆம் ஆண்டு அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலும் இளம் வாக்காளர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்று அவர் கூறினார். மேலும், எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்க முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமாக உள்ளதாகவும் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

முதல்முறை வாக்காளர்கள் பலர் பிரதமருடன் பேசும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும், வேலைவாய்ப்புகளை பெறுவதில் மோடியின் தலைமை இளைனஞர்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது ஒரு வரலாற்று நிகழ்வு எனவும், இத்தனை இளம் வாக்காளர்களுடன் பிரதமர் ஒருவர் கலந்துரையாடுவது இதுவே முதல்முறை எனவும் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

இந்த தொடர்பானது சந்தேகத்திற்கு இடமின்றி தேர்தலில் முதல்முறை வாக்காளர்களின் பங்கேற்பை அதிகரிக்கும்; நமது நாட்டின் ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் என தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வானது நாடு முழுவதும் 5000 இடங்களில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் தலா 1000 பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share this story