அபுதாபியில் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி, அதிபர் அல் நஹ்யான்..

By 
ugi

பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இன்று பிற்பகலில் இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, அபுதாபி சென்றடைந்துள்ளார். அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார்.

அபுதாபி விமான நிலையத்தில் தன்னை வரவேற்பதற்கு நேரம் செலவழித்த ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் பயனுள்ள பயணத்தை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது இரு தரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், இரு தலைவர்களின் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இந்த நிகழ்ச்சில் பேசிய பிரதமர் மோடி, “உங்களது அன்பான வரவேற்புக்கு நன்றி. உங்களைச் சந்திக்க நான் இங்கு வரும்போதெல்லாம், நான் என் குடும்பத்தைச் சந்திக்க வந்ததாக உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் நானும் ஐக்கிய அரபு அமீரக அதிபரும் 5 முறை சந்தித்துள்ளோம். இது மிகவும் அரிதானது மற்றும் எங்கள் நெருங்கிய உறவைப் பிரதிபலிக்கிறது.” என்றார்.

அதனைத்தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் யுபிஐ சேவையை பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான கட்டணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் மூலம் 24 மணி நேரமும் பணம் செலுத்த முடியும். நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இந்த கட்டண முறை செயல்பாட்டில் உள்ளது. இந்தியாவின் யுபிஐ பணம் செலுத்தும் முறையில் இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளன.

இதில், இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் இந்தியாவின் யுபிஐ பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க இந்திய சமூகத்தினர் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு ‘அஹ்லான் மோடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வணக்கம், வரவேற்பு ஆகிய சொற்களுக்கு அரபு மொழியில் அஹ்லான் என்று பெயர். இந்த நிகழ்ச்சி அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

இன்றும் நாளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, நாளையும், நாளை மறுநாளும் கத்தாரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் இந்தியா திரும்பவுள்ளார். அபுதாபி பயணத்தின் போது, அங்கு கட்டப்பட்டுள்ள இந்து கோயிலை நாளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, துபாய் மன்னரையும் சந்தித்து பேசவுள்ளார். 

Share this story